சில
நாட்களாக என் மதுரையைச் சுற்றிலும் நிகழும் அரசியல்,ஆன்மீகக் களேபரங்களைப் பார்த்துக்
கொண்டேதான் வருகிறேன்... தெரிந்தோ,தெரியாமலோ, மதுரையின் மீது வன்முறைச் சாயம்
பூசப்பட்டு விட்டது (எல்லாம் சினிமாவின் புண்ணியம்). அதோடு, இந்த ஆன்மீக அல்லாடல்கள் வேறு... ஆனால்,மதுரையின் அடையாளம் அதுவல்ல..
எங்க ஊர்
சனங்களுக்கு அதைப் பத்தியெல்லாம் கவலையில்லை.. வழக்கம்போல இரவு 11,12 மணிக்கு மதுரைக்கு வந்து அப்படியே நாலஞ்சு
இட்லியைச் சாப்பிட்டுட்டு,இல்ல புரோட்டவைச் சாப்பிட்டுட்டு, பூ மார்க்கெட்ல போய் பூவைப் போட்டுட்டு,அல்லது பூவை எடுத்துட்டு,ஆரப்பாளையம் மார்க்கெட்,மாட்டுத்தாவணி மார்க்கெட்ல காய்கறிகளைப்
போட்டுட்டு,
மீன்
மார்க்கெட்ல மீன் எடுத்துட்டு,இன்னும் பல ஊர்களுக்கு காய்கறிகளையும்,பூவையும் வண்டியில ஏத்தி அனுப்பிட்டு,அப்படியே விடிஞ்சும்,விடியாம இருக்கும் காலையில 3,4 மணிக்கு அவசர,அவசரமா சீனிச்சேவு,வடை,மொச்சையை வீட்டுல இருக்குற பிள்ளைகளுக்கு
வாங்கிட்டு ஒரு டீயைக் குடிச்சுட்டு பரபரப்பா பெரியார் நிலையத்துக்கோ,ஆரப்பாளையத்துக்கோ கிளம்பும் போது விடியுற
மதுரையைத் தான் எங்க சனங்க இப்பவும் பாத்துட்டு இருக்காங்க...
அந்த
உழைக்கிற சனங்களுக்கு,
இரவு
முழுசும் முழிச்சுட்டு,
கிடைக்கிற
கேப்பில ரெண்டு மணி நேரம் தூங்கிட்டு,பகல்ல ஒரு மூணு மணி நேரம் தூங்கிட்டு
மறுபடியும் அடுத்த நாளுக்கு தயாராகிற உழைப்பாளிகளின் நகரம்தான் மதுரை...
எங்களுக்கு ஆதினமோ,நித்தியானந்தாவோ,அழகிரியோ,அட்டாக்கோ,ப்ளக்ஸ் பேனர்களோ,பாஜக மாநாடோ,மதுரையில் நடக்கும் அரசாங்க இத்யாதிகளோ
எதுவும் எங்களின் கவனத்திற்கு வராது... மதுரையின் அடையாளம் அவர்களோ, அல்லது சினிமாவில் காட்டுவது போன்ற
வீச்சரிவாள்களோ,கத்திகளோ,ரத்தமோ அல்ல... மதுரை ஓர் எளிய மக்களின்
வாழ்வாதாரத்தை ஒருங்கிணைக்கும்,அவர்களின் தேவைகளைத் தீர்த்து வைக்க சந்தையை ஏற்படுத்தும் ஒரு அற்புத
மாநகரம்...
மதுரை எளிய
மனிதர்களுக்கு வாழ்வாதாரத்தைக் காலந்தோறும் வழங்கிக்கொண்டிருக்கும் தாயின் மடி
போன்ற மாநகரம்..


No comments:
Post a Comment